Search This Blog

10 April 2012

கரியமில வாயுவை கட்டுப்படுத்த 150 கோடி அமெரிக்க டாலர் ஒதுக்கீடு...!

கரியமில வாயுவை கட்டுப்படுத்த 150 கோடி அமெரிக்க டாலர் ஒதுக்கீடு...!

சுற்றுச்சூழலில் கலக்கும் கார்பனின் அளவை குறைக்கும் நோக்கில், ஐக்கிய ராஜ்ஜியம் அறிவித்திருக்கும் புதிய திட்டம் ஒன்றுக்கு சுமார் 150 கோடி அமெரிக்க டாலர்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

கார்பன் கேப்டர் அண்ட் ஸ்டோரிங் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த திட்டத்தின் நோக்கம் மிக எளிமையானது. நிலக்கரி, பெட்ரோலிய எண்ணெய் மற்றும் எரிவாயுவை பயன்படுத்தும்போது பெரிய அளவில் கரியமிலவாயு காற்று வெளியில் கலக்கிறது. இந்த கரியமிலவாயு சுற்றுச்சூழலில் இருக்கும் கார்பனின் அளவை கணிசமாக அதிகரிப்பதால் புவி வெப்பமடையும் வேகம் அதிகரிக்கிறது. அது மனிதன் உள்ளிட்ட விலங்குகளையும் தாவரங்களையும் கடுமையாக பாதிக்கிறது. இந்த பாதிப்புகளிலிருந்து உலக உயிரினங்கள் காப்பாற்றப்படவேண்டுமானால், காற்றில் கலக்கும் கரியமிலவாயுவின் அளவை குறைக்கவேண்டும்.

ஆனால், இன்றைய நிலையில் மனிதர்களின் சொந்த தேவை மற்றும் தொழில் தேவைகளில் நிலக்கரியும், பெட்ரோலிய எண்ணெயும், எரிவாயுவும் மிக மிக அத்தியாவசிய மூலப்பொருளாக இருக்கிறது. எனவே நிலக்கரி, பெட்ரோல் மற்றும் எரிவாயுவின் பயன்பாட்டை நிறுத்துவது என்பது நடைமுறை சாத்தியமற்ற விஷயம்.

அப்படியானால் இவற்றை பயன்படுத்தும்போது வெளியாகும் கரியமிலவாயுவை காற்றுவெளியில் கலக்காமல் தடுப்பதன் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்க முடியும் என்பதுதான் இந்த சிசிஎஸ் திட்டத்தின் அடிப்படை தத்துவம். அதனை செயல்படுத்துவதற்கான நிதி உதவியை தான் ஐக்கிய ராஜ்ஜியம் இன்று அறிவித்திருக்கிறது.
இதை நான்கு வழிமுறைகளில் நடைமுறைப்படுத்த ஐக்கிய ராஜ்ஜிய அரசு விரும்புகிறது.

ஒன்று கரியமில வாயுவை வெளியிடாத அணுமின் நிலையங்களை புதிதாக நிறுவுவது. இரண்டாவது காற்றாலை மின்சார தயாரிப்பு உள்ளிட்ட மீளுருவாக்கம் செய்யக்கூடிய தொழில்நுட்பங்களை பெருமளவில் ஊக்குவிப்பது, மூன்றாவது மின்சார பயன்பாட்டை திறமையாக பயன்படுத்தி மின்சாரத்தை சேமிப்பது நான்காவதாக, நிலக்கரி மற்றும் எரிவாயுவை பயன்படுத்தும்போது வெளியேறும் கரியமிலவாயுவை அப்படியே சேகரித்து, அதை காற்றில் கலக்காமல் தடுத்து, நிலத்துக்கு அடியில் இருக்கும் ஆழமான பள்ளங்களில் கொண்டுபோய் சேமித்துவைப்பது.

No comments:

Post a Comment

please encourage us by sending your comments