Search This Blog

23 July 2012

ஆப்பரேட்டிங் சிஸ்டம் - சில அடிப்படைகள்

ஆப்பரேட்டிங் சிஸ்டம் - சில அடிப்படைகள்


விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நம் அன்றாடப் பணிகளில் கலந்து, நம்மோடு இணைந்த இக்காலத்தில், அதன் பல இயக்கச் சொற்களை அப்படியே ஆங்கிலத்திலேயே நாம் புழங்கி வருகிறோம். அவற்றில் சிலவற்றின் முழுச் செயல்பாட்டினை இங்கு காணலாம்.


1. Abort (அபார்ட்):

ஒரு புரோகிராம் அல்லது செயல்பாட்டினை, அது இயற்கையாக முடிவதற்கு முன்னரே நிறுத்துவதனை அபார்ட் என்கிறோம். இதனை நாமாகவும் நிறுத்தலாம்; தானாக கம்ப்யூட்டரில் சிக்கல் ஏற்பட்டும் நிறுத்தப்படலாம்.

எடுத்துக் காட்டாக, பிரிண்ட் கட்டளை கொடுத்த பின்னர், நாம் விரும்பினால், அச்சிடுவதனை அபார்ட் செய்திட, புரோகிராமே வழி கொடுக்கிறது. எதனையேனும் தேடச் சொல்லி, கட்டளை கொடுத்து, கம்ப்யூட்டர் தேடி, முடிவுகளைப் பட்டியலிடுகையில், நமக்குத் தேவையான தகவல் கிடைத்தால், செயல்பாட்டினை அபார்ட் செய்திட வழி கிடைக்கிறது. இதனை crash என்பதனுடன் ஒப்பிடலாம். கிராஷ் ஏற்படுகையில், சிஸ்டம் முழுமையும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் உட்பட, முடங்கிப் போய் நின்று விடுகிறது.


2. Batch File (பேட்ச் பைல்):


வரிசையாக அல்லது குழுவாக அமைக்கப்பட்ட கட்டளைகளின் தொகுப்பு. இந்த கட்டளைகளை அப்படியே மொத்தமாக, இவை உள்ள பைலை இயக்கிச் செயல்படுத்தலாம். எடுத்துக் காட்டாக, டாஸ் அடிப்படையில் இயங்கும் சிஸ்டத்தில், சிஸ்டம் தானாக, AUTOEXEC.BAT என்ற பைலை இயக்கும். இதில் டாஸ் இயக்கம் தொடக்கத்தில் இயங்குவதற்குத் தேவையான கட்டளைகள் இருக்கும். சில ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள், பேட்ச் பைல் என்பதற்குப் பதிலாக command file அல்லது shell script எனப் பயன்படுத்துகின்றனர்.


3. BIOS (பயாஸ்):

இதனை பைஓ.எஸ். என அழைக்க வேண்டும். ஆனால் பயாஸ் என அழைக்கப்படுவதே பழக்கமாகிவிட்டது. டிஸ்க்கில் உள்ள எந்த புரோகிராமோடும் தொடர்பு கொள்ளாமல், ஒரு கம்ப்யூட்டர் என்ன செய்திட வேண்டும் என அமைக்கப்பட்டு, கம்ப்யூட்டரிலேயே பதிந்து தரப்படும் ஒரு புரோகிராம். ஒரு பெர்சனல் கம்ப்யூட்டரின் பயாஸ் புரோகிராமில், கீ போர்டு, டிஸ்பிளே ஸ்கிரீன், டிஸ்க் ட்ரைவ்கள், சீரியல் தொடர்புகள் மற்றும் இது போன்ற பல சில்லரை செயல்பாடுகளை மேற்கொள்ள இந்த புரோகிராமில் கட்டளைகள் இருக்கும்.

இந்த பயாஸ் புரோகிராம் ஒரு சிப்பில் பதிந்து தரப்பட்டிருக்கும். இதனால், டிஸ்க் ட்ரைவ் கெட்டுப் போனாலும், கம்ப்யூட்டருக்கு இந்த தொடக்க நிலை புரோகிராம் கிடைக்கும். இதனால் கம்ப்யூட்டர் ஒன்று, தானாக இயங்க வழி கிடைக்கிறது. மெமரி சிப்பைக் காட்டிலும், RAM வேகமாக இயங்கும் என்பதால், பல கம்ப்யூட்டர்களில், பயாஸ் ROMலிருந்து RAMக்கு மாற்றப்பட்டு, அங்கிருந்து இயங்கும்படி அமைக்கப்படும். இதனை ஆங்கிலத்தில் shadowing என அழைக்கிறோம்.

இப்போது வரும் கம்ப்யூட்டர்களில் flash BIOS என அமைக்கப்பட்டுக் கிடைக்கிறது. அதாவது பயாஸ் புரோகிராம் பிளாஷ் மெமரியில் பதியப்பட்டு இயக்கப்படுகிறது. இதனால், தேவைப்படுகையில், இதனை அப்டேட் செய்து கொள்ளலாம். பொதுவாக BIOS என்பது அனைத்துக் கம்ப்யூட்டர்களிலும் இப்படித்தான் இருக்க வேண்டும் என பொதுவான வரைமுறையுடன் அமைக்கப்படுகிறது.

BIOS புரோகிராமில் பல வகையான பதிப்புகள் இருந்தாலும், அடிப்படையில் அவை ஒரே கட்டமைப்பைக் கொண்டுள்ளன. கூடுதலாக ஏதேனும் டாஸ் கட்டளைகள் தரப்பட வேண்டும் என்றால், அவை சாப்ட்வேர் மூலம் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டரில் இணைத்துச் செயல்படுத்தும் ப்ளக் அண்ட் ப்ளே சாதனங்களைக் கையாளும் புரோகிராம்களை PnP BIOS அல்லது PnPaware BIOS என அழைக்கின்றனர்.


Clean boot (கிளீன் பூட்):

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான புரோகிராம்களுடன், ஒரு கம்ப்யூட்டரை இயக்குவதற்கு Clean boot என்று பெயர். பொதுவாக, கம்ப்யூட்டர் ஒன்றை இயக்குகையில், இயக்குபவருக்கான, கம்ப்யூட்டிங் சூழ்நிலையை உருவாக்க, பல பைல்களும், புரோகிராம்களும், ட்ரைவிலிருந்து எடுக்கப்பட்டு, இயக்கப்படும். செய்யப்படுகையில், இந்த கூடுதல் புரோகிராம்கள் அனைத்தும் இல்லாமல், ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதற்குத் தேவையானவை மட்டும் இயக்கப்படும்.

இவ்வாறு இயக்குவது, கம்ப்யூட்டர் செயல்பாட்டில் உள்ள பிரச்னைகளை அறிய உதவும். இவ்வாறு இயக்கியபின், டயாக்னாஸ்டிக் டெஸ்ட் எனப்படும் சோதனையை மேற்கொள்ளலாம். இந்த சோதனையில், வழக்கமாக கம்ப்யூட்டர் இயங்கத் தேவையான ஓட்டத்தில் எங்கே பிரச்னை உள்ளது என அறியலாம்.

26 June 2012

Samsung S 6102 காலக்ஸி டூயோஸ்

Samsung S 6102 காலக்ஸி டூயோஸ்


தொடர்ந்து இரண்டு சிம்களில் இயங்கும் மொபைல் போன்களை பல்வேறு வசதிகள் கொண்டதாக வடிவமைத்து வழங்கி வரும் சாம்சங் நிறுவனம், அண்மையில் காலக்ஸி எஸ் 6102 என்ற பெயரில் ஒரு கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் மொபைல் ஒன்றை விற்பனைக்கு வழங்கியுள்ளது.

இதன் திரை 3.12 அங்குல அகலத்தில், தொடு திரையாக உள்ளது. இதன் ரெசல்யூசன் 320x240 பிக்ஸெல் கொண்டுள்ளது.

போன் மெமரி 160 எம்.பி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 32 ஜிபி வரை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.

இது ஒரு 3ஜி போனாகவும் செயல்படுகிறது. வை-பி இணைப்பு கிடைக்கிறது. இதன் ப்ராசசர் 832 MHz திறன் கொண்டதாகத் தரப்பட்டுள்ளது.

3.15 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா இணைக்கப்பட்டுள்ளது. வீடியோ பதிவு மற்றும் இயக்கம் கிடைக்கிறது.

எஸ்.எம்.எஸ்., எம்.எம்.எஸ்., இன்ஸ்டண்ட் மெசஞ்சர், புஷ்மெயில் ஆகிய வசதிகள் கிடைக்கின்றன. எம்பி3 பிளேயர், ஸ்டீரியோ எப்.எம். ரேடியோ ஆகியவை இசைப் பிரியர்கள் விரும்பும் அம்சங்களாக உள்ளன.

24 June 2012

பைலின் துணைப் பெயர் (Extension) காட்டப்பட

பைலின் துணைப் பெயர் (Extension) காட்டப்பட


பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டியலைக் காண்கையில், பைலின் முதல் பெயர் மட்டுமே காட்டப் படும். ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரியாது.

எடுத்துக்காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக் பைல் அமைக்கலாம். இவை வரிசையாக இருந்தால், எது என்ன பைல் என்று உடனே நமக்குத் தெரியாது.

எனவே பைலின் துணைப் பெயரும் காட்டப்பட்டால், நம் வேலை எளிதாகிவிடும். இதனை எப்படி மேற் கொள்ளலாம் என்று பார்ப்போம்.

பைல் பெயர் ஒன்றில், அதன் புள்ளியை அடுத்து வலது பக்கம் உள்ள பெயர், அந்த பைல் என்ன வகையை, பார்மட்டைச் சேர்ந்தது என்று காட்டும்.

பொதுவாக, இந்த பெயர் காட்டப்பட மாட்டாது. இதனையும் சேர்த்து ஒரு பைல் பெயர் காட்டப்பட வேண்டும் எனில், My Computer>Tools>Folder Options எனச் சென்று கிடைக்கும் விண்டோவில் View தேர்ந்தெடுக்கவும்.

இதில் Hide extensions for known file types என்று இருக்கும் வரியின் முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

இனி பைல் பெயர்கள் முழுமையாக அதன் எக்ஸ்டன்ஷன் பெயருடன் காட்டப்படும்.


கூகுள் தேடுதலில் கால வரையறை


இன்று தகவல் தேடுதலுக்குப் பலரும் பயன்படுத்துவது கூகுள் தேடல் தளத்தைத்தான். நம் தேடலும், கூகுள் தரும் முடிவுகளும் ஆச்சரியத்தை அளித்தாலும், சில வேளைகளில் நாம் தேடும் வகையில் தகவல் கிடைக்காது.

தேவையற்ற தகவல்கள் வந்து குவிக்கப்பட்டிருக்கும். நாம் அண்மையில் 20 நாட்களுக்குள் வந்த தகவல்களைத் தேடுவோம். ஆனால், கூகுள் எப்போதோ, சில மாதங்களுக்கு, ஆண்டு களுக்கு முன்னர் வந்த தகவல்களையும் காட்டும்.

இவ்வாறு இல்லாமல், குறிப்பிட்ட நாட்களுக்குள் இணையத்தில் பதித்த தகவல்களை மட்டும் காட்டுமாறு நாம் கூகுளுக்கு ஆணையிடலாம்.

1. முதலில் நாம் தேடும் தேடல் சொல் அல்லது சொற்களை கூகுள் சர்ச் பீல்டில் அல்லது டூல் பாரில் அமைக்க வேண்டும்.

2. முடிவுகளுக்கான பட்டியல் காட்டப்படும். இதில் இடது பக்கப் பிரிவில் உள்ள Show search tools என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது கால வரையறைகளை அமைக்கும் வகையில் சில ஆப்ஷன்ஸ் விரிக்கபடும்.

3. இதில் "Any time" என்பது மாறா நிலையில் அமைக்கப்பட்டிருக்கும். இதன் கீழாக "Past hour," "Past 24 hours," "Past 2 days," என தொடர்ந்து பல ஆப்ஷன்ஸ் கிடைக்கும்.

4. இதன் கீழாக Custom range என்பதில் கிளிக் செய்திடவும்.

5. உடனே காலண்டர் ஒன்று காட்டப்படும். இதில் எந்த நாளிலிருந்து பதிக்கப்பட்ட தகவல் வேண்டும் என்பதை "From" பீல்டில் அமைப்பதன் மூலம் வரையறை செய்திடலாம்.

6. நீங்கள் பீல்டை காலியாக விட்டு விட்டால், இன்று வரை பதிக்கப்பட்ட தகவல்கள் கிடைக்கும். இல்லை எனில் இங்கும் நாள் ஒன்றைக் குறிப்பிடலாம்.

7. அடுத்து, Search என்பதில் கிளிக் செய்தால், நாம் குறிப்பிட்ட கால வரையறைக்குள் பதியப்பட்ட தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

இது நமக்கு மிகவும் உதவும் ஒரு தேடல் வசதி. இதன் மூலம் நாம் விரும்பும் வகையில் முடிவுகளைப் பெறலாம்.