Pages

22 September 2013

அதிர்ச்சி தகவல்_ பாராளுமன்ற, மும்பை தாக்குதல்களின் பின்னணியில் மத்திய அரசு.

அதிர்ச்சி தகவல் 

முஸ்லிம்களை கருவறுக்க பாராளுமன்ற,மும்பை தாக்குதல்களின் பின்னணியில் மத்திய அரசு.

பாராளுமன்றத் தாக்குதலையும், மும்பை தாக்குதலையும் திட்டமிட்டு நடத்தியது மத்திய அரசு என்றும், தீவிரவாத தடுப்புச் சட்டங்களை உருவாக்கவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்டு பிரபலமான ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மா கூறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இஷ்ரத் வழக்கில் மத்திய அரசுக்காக பிரமாணப்பத்திரம் தயாரித்த முன்னாள் அண்டர் செகரட்டரி ஆர்.வி.எஸ்.மணி, சதீஷ் வர்மா இவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார். 

பாராளுமன்ற தாக்குதலுக்கு பிறகு பா.ஜ.க அரசு பொடா சட்டத்தை கொண்டுவந்ததும், மும்பை தாக்குதலுக்கு பிறகு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு UAPA சட்டத்தைக் கொண்டுவந்ததையும் இதற்கு ஆதாரமாக சதீஷ் வர்மா சுட்டிக்காட்டினார் என்று ஆர்.வி.எஸ்.மணி தெரிவித்துள்ளார். 

இஷ்ரத் வழக்கை சி.பி.ஐக்கு அளிக்கும் விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தி உள்துறை அமைச்சகம் தயாரித்த இரண்டு பிரமாணப்பத்திரங்கள் தொடர்பாக சதீஷ் வர்மா, ஆர்.வி.எஸ். மணியிடம் விசாரணை நடத்தினார். 2009-ஆம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் தாக்கல் செய்த முதல் பிரமாணப்பத்திரத்தில் சி.பி.ஐ விசாரணையை எதிர்த்தது.அதற்கு காரணமாக,இஷ்ரத் உள்ளிட்டோர் லஷ்கர் – இ – தய்யிபா போராளிகள் என்று ஐ.பி கூறிய தகவலை சுட்டிக்காட்டியது. இதே ஐ.பி தகவலை காரணம் காட்டித்தான் குஜராத் அரசு போலி என்கவுண்டரை நியாயப்படுத்தியது. ஆனால், 2009 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தாக்கல் செய்த 2-வது பிரமாணப்பத்திரத்தில் ஐ.பி தகவலை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது என்று கூறி சி.பி.ஐ விசாரணையைஆதரித்திருந்தது. 


சி.பி.ஐ விசாரணையை எதிர்த்த முதல் பிரமாணப்பத்திரத்தை தயாரித்தது, சி.பி.ஐ தாக்கல் செய்யவிருக்கும் 2-வது குற்றப்பத்திரிகையில் குற்றம் சாட்டப்படவிருக்கும் ஐ.பி அதிகாரி ராஜேந்தர் குமாரா? என்று சதீஷ் வர்மா கேள்வி எழுப்பியுள்ளார். உள்துறை அமைச்சகத்தில் செயலாளர் பதவி கிடைப்பதற்கு ஐ.பி ரிப்போட் தேவை என்பதால் அதிகாரிகள் ஐ.பியின் பக்கவாத்தியமாக செயல்படுவதாக சதீஷ் வர்மா குற்றம் சாட்டினார் என்றும் ஆர்.வி.எஸ்.மணி தெரிவித்துள்ளார். இதுத்தொடர்பாக நகர வளர்ச்சித்துறை துணை செயலாளரிடம் மணி புகார் அளித்துள்ளாராம். ஆனால், இக்குற்றச்சாட்டுக்களுக்கு பதில் அளிக்க சதீஷ் வர்மா மறுத்துவிட்டார். கூடுதல் விபரங்களுக்கு சி.பி.ஐ தொடர்புக் கொள்வேன் என்று அவர் தெரிவித்துள்ளார். 

இஷ்ரத் வழக்கு சர்ச்சையை கிளப்பியதை தொடர்ந்து குஜராத் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில்(எஸ்.ஐ.டி) உறுப்பினராக இருந்த சதீஷ் வர்மா, தனது சக ஊழியரேஆதாரங்களில் ஏற்படுத்திய குளறுபடிகள் குறித்து நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்ததன் மூலம் கவனத்தை ஈர்த்தார். என்கவுண்டர் போலி என்பதை 2011-ஆம் ஆண்டு நீதிமன்றத்திற்கு வர்மா தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து முஸ்லிம் போராளிகளை வர்மா ஆதரிப்பதாக அரசும், இவ்வழக்கில் தொடர்புடைய நபர்களும் அவர் மீது பாய்ந்தனர்.இந்த நெருக்கடிகளுக்கு மத்தியிலும் இஷ்ரத் மற்றும் ஜாவேத்(இவரது முந்தைய பெயர் பிராணேஷ் குமார்) ஆகியோரை வஸாத் என்ற இடத்தில் இருந்து குஜராத் க்ரைம் ப்ராஞ்ச் கடத்திச் சென்று அஹ்மதாபாத்திற்கு கொண்டுவந்ததாக கூறும் சாட்சிகளின் வாக்குமூலத்தை பதிவுச் செய்ய தயாரானார் வர்மா. 

போலி என்கவுண்டர் தொடர்பாக உண்மையான ஃபோட்டோக்கள் அடங்கிய கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்கை கைப்பற்ற அஹ்மதாபாத்தில் உள்ள ஃபாரன்சிக் சயன்ஸ் லேபில் நடத்திய ரெய்டும் வர்மாவை இன்னமும் பிரபலப்படுத்தியது.ஏ.கே-56 துப்பாக்கிகளுடன் ஒன்பது எம்.எம் துப்பாக்கிகளை பயன்பத்தி இஷ்ரத் உள்ளிட்டோரை வெகு அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டதை தெளிவுப்படுத்தும் ஃபோட்டோக்களாக இவை அமைந்தன. 

1986 பாட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான வர்மா, அஹ்மதாபாத் ட்ராஃபிக் துணை கமிஷனராக பணியாற்றிய வேளையில்தான் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் குஜராத் போலீஸால் அநியாயமாக சுட்டுக்கொல்லப்பட்ட போலி என்கவுண்டர் வழக்கில் விசாரணைக்காக நியமிக்கப்பட்டார்.ஆனால், 16 மாதங்களுக்குள் ஜுனாகட்டில் உள்ள போலீஸ் ட்ரெயினிங் கல்லூரிக்கு மாற்றம்செய்யப்பட்டார்.இவ்வேளையில் சி.பி.ஐக்கு உதவுவதற்காக வர்மாவை, உயர்நீதிமன்றம் நியமித்தது. காலாவதி முடிந்த பிறகும் இவரது சிறந்த சேவையின் காரணமாக, சி.பி.ஐ இரண்டு முறை பணிக்காலத்தை நீட்டித்து வாங்கியது.கடந்த ஜூன் 24-ஆம் தேதி சி.பி.ஐக்கு உதவு பணி வர்மாவுக்கு முடிவடைந்தது.பின்னர் மாநில போலீசுக்கு திரும்பிய மீண்டும் போலீஸ் ட்ரெயினிங் கல்லூரியில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். 

Ref: Times of India, thoothuonline.com, Inneram.com,Thejas, youtube.com etc. etc.. 

***********

பாராளுமன்றம் – மும்பை தாக்குதல்கள் : வலுப்பெறும் சந்தேகம்!


16 Jul 2013 புதுடெல்லி:2008 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மும்பையில் நடந்த தாக்குதலும், 2001-ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தாக்குதலும் மத்தியில் ஆட்சிபுரிந்த அரசுகளே திட்டமிட்டு நடத்தியதாக வெளியான தகவல் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

இண்டலிஜன்ஸ் ஏஜன்சிகளின் உதவியுடன் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களைப்போலவே, நாட்டை ஆளும் அரசுகளும் தங்களது கேவலமான லட்சியங்களை நிறைவேற்ற இம்மாதிரியான தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்றியுள்ளன என்பது ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மாவின் கூற்றில் இருந்து தெரியவருகிறது.

பாராளுமன்ற தாக்குதல் குறித்து பிரபல எழுத்தாளரும், சமூக ஆர்வலருமான அருந்ததி ராய், மனித உரிமை ஆர்வலரான நந்திதா ஹக்ஸர் உள்ளிட்டோர் ஏற்கனவே எழுப்பிய சந்தேகங்களை வலுப்படுத்தும் வகையில் சதீஷ் வர்மாவின் கூற்று அமைந்துள்ளது. சவப்பெட்டி ஊழலில் பா.ஜ.க தலைமையிலான தே.ஜ.கூ அரசு வெட்கி தலைகுனிந்த வேளையில்தான் பாராளுமன்ற தாக்குதல் அரங்கேறியது.

பாராளுமன்ற தாக்குதல் அரங்கேறுவதற்கு முன்பே இத்தகையதொரு சம்பவம் நடக்க இருப்பதாக அரசும், போலீசும் தெரிவித்திருந்தன.

2001-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி பிரதமராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பேயும் பாராளுமன்ற தாக்குதல் விரைவில் நடக்கவிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்த எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட பின்னரும் வெடிப்பொருட்களுடன் ’தீவிரவாதிகள்’ எனக் கூறப்படுவோர் வந்த கார் பாராளுமன்ற வளாகத்திற்குள் எவ்வாறு நுழைந்தது? என்ற கேள்வியை அருந்ததி ராய் எழுப்பியிருந்தார்.

இவ்வழக்கில் அநியாயமாக தூக்கிலிடப்பட்டு கொலைச் செய்யப்பட்ட அப்ஸல் குரு, சரணடைந்த போராளி என்றும், இவர் ஜம்மு-கஷ்மீரில் ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்சுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார் என்று நீதிமன்றமே உறுதிச் செய்திருந்தது.

போலீஸின் கண்காணிப்பில் இருந்த ஒரு நபர், எவ்வாறு நாட்டின் உயர் பாதுகாப்புடன் கூடிய பாராளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டமுடியும்? என்ற கேள்வியும் எழுந்திருந்தது.

தாக்குதலின் போது மோதலில் கொல்லப்பட்டதாக தீவிரவாதிகள் என்று அரசு கூறும் ஐந்து நபர்கள் குறித்த விபரங்களை இதுவரை அரசால் அளிக்க முடியவில்லை என்பதும் பாராளுமன்றத்தாக்குதலில் நிலவும் மர்மமாகும்.

பாராளுமன்ற தாக்குதலில் பங்கேற்றார் என்று கூறப்படும் நபரை டெல்லிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை என்னிடம் கஷ்மீர் டி.எஸ்.பி தவீந்தர் சிங் ஒப்படைத்தார் என்ற அப்ஸல் குருவின் வாக்குமூலம் குறித்தோ, அப்ஸல் குருவும், தவீந்தர் சிங் இடையே நிகழ்ந்த தொலைபேசி உரையாடல்கள் குறித்தோ இதுவரை போதிய விசாரணைகள் நடைபெறவில்லை. போலீஸ் மற்றும் ஐ.பி.யின் இன்ஃபார்மராக செயல்பட்டவர் அப்ஸல் குரு ஆவார்.

மஹராஷ்ட்ரா ஏ.டி.எஸ் தலைவராக இருந்த ஹேமந்த் கர்கரேயின் மரணம் குறித்து எழுந்த சந்தேகங்கள், சதீஷ் வர்மாவின் கூற்றைத்தொடர்ந்து வலுப்பெறுகிறது.

மும்பை தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் இண்டலிஜன்ஸ் பீரோ மற்றும் ஹிந்துத்துவா பயங்கரவாதிகளின் கரங்கள் உள்ளதாக ஏற்கனவே மஹராஷ்ட்ரா மாநில முன்னாள் ஐ.ஜி எஸ்.எம்.முஸ்ரிஃப் தகவல் வெளியிட்டிருந்தார்.

கர்கரேயைக் கொன்றது யார்? என்ற நூலில் அவர் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.

புல்லட் ப்ரூஃப் (குண்டு துளைக்காத ஆடை) ஜாக்கெட் அணிந்த பிறகு கர்கரேயின் உடலில் தோட்டாக்கள் எவ்வாறு துளைத்தன? என்று கர்கரேயின் மனைவி நீதிமன்றத்தில் அளித்த மனுவில் கேள்வி எழுப்பியிருந்தார். இச்சம்பவத்தில் முக்கிய ஆதாரமான இந்த ஜாக்கெட் பின்னர் மர்மமான முறையில் காணாமல் போனது. 2008-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி இரவு 11.24 மணியளவில் தீவிரவாதிகளை நேருக்கு நேராக சந்திப்பதற்காக காமா ஹஸ்பிடல் வளாகத்திற்கு சென்ற கர்கரேக்கு ராம்பவனுக்கு முன்னால் வைத்து தோட்டா தாக்கியது. கர்கரேயுடன் அசிஸ்டெண்ட் கமிஷனர் அசோக் காம்தே, சீனியர் இன்ஸ்பெக்டர் விஜய் சாலஸ்கர் ஆகியோரும் கொல்லப்பட்டனர். ஆனால், போலீஸ் குறிப்பேட்டின் (மானுவல்) படி இவர்கள் மூன்று பேரும் ஒன்றாக சென்றிருக்க வாய்ப்பில்லை. கூடுதல் போலீஸ்காரர்கள் தேவை என்று கூறி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு கர்கரே அளித்த உத்தரவு நிறைவேற்றப்படவில்லை. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு ஒரு மணிநேரம் கழியும் வரை கர்கரே மற்றும் இதர போலீஸ் அதிகாரிகளின் அருகில் போலீஸ் வராதததும் மர்மமாக உள்ளது. போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இரண்டு நிமிட தொலைவிலேயே உள்ள இடத்தில் தான் கர்கரேயும் இதர போலீஸ் அதிகாரிகளும் சுடப்பட்டு கிடந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

***********

இந்திய‌ நாடாளுமன்றத் தாக்குதல் : அருந்ததிராய் எழுப்பிய‌ 13 கேள்விகள். இதற்கு இந்திய‌ அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலெல்லாம் வெறும் மௌனம் மட்டும் தான்

1) நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே காவல்துறையும் மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருந்த ஃபாசிச அரசாங்கமும் ஓர் அறிவிப்பை செய்து கொண்டே இருந்தன. அது, நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்பதே, 2001ம் ஆண்டு டிசம்பர் 12ம் நாள், பாதுகாப்பு அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் (Informal Meeting) நிச்சயமாக நமது நாடாளுமன்றம் தாக்கப்படலாம் என்று அன்றைய பிரதமர் வாஜ்பேய் திட்டவட்டமாக ஓர் எச்சரிக்கையை விடுத்தார்.

டிசம்பர் 13ம் நாள் நாடாளுமன்றம் தாக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் நாடாளுமன்றத்தைப் பாதுகாக்க பாதுகாப்புபடையினருக்குக் கடுமையான பயிற்சிகள் அளிக்கபட்டன. நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் சிறப்புக் காவல்கள் போடப்பட்டன. இந்நிலையில் வெடிகுண்டுகளுடன் கார் ஒன்று எப்படி நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைந்தது? 

2) நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் டெல்லியில் இயங்கும் சிறப்புக் காவல் படைப் பிரிவு இந்த நாடாளுமன்றத் தாக்குதல் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற அமைப்புகளின் திட்டமிட்ட செயல் என்று அறிவித்தது. அத்தோடு இந்தத் தாக்குதல் முஹம்மது என்பவரல் தலைமையேற்று நடத்தப்பட்ட தாக்குதல் என்றது. இந்த முஹம்மது என்பவர்தான் 1998ல் இந்திய விமானம் ஐ.இ.814ஐ கடத்தியவர் என்றும் அறிவித்தது. வழக்கு முடிந்த போது இவை எதுவுமே எந்த நீதிமன்றத்திலும் நிருபிக்கப்படவில்லை. இதுதான் உண்மைநிலை என்றால் இவர்களால் எப்படி நாடளுமன்றத் தாக்குதல் நடந்தவுடன் இது போன்ற அறிவிப்புகளை செய்ய முடிந்த்து? அப்படி அறிவிக்க இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது? 

3) நாடளுமன்றத் தாக்குதல் நடைபெற்றபோது அதனை முழுமையாக நாடளுமன்ற வளாகத்திலுள்ள கேமராக்களாலும் நாடளுமன்ற அரங்கிற்குள் இருந்த (Close Circuit TV- CCTV) க்ளோஸ் சர்க்யூட் டிவி என்ற சி.சி.டி.விகளாலும் பதியப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த நாடளுமன்ற உறுப்பினர் கபில்சிபால் இந்தத் தொலைக்காட்சிப் பதிவை நாடளுமன்ற உறுப்பினர்களுக்கு திரையிட்டுக் காட்டவேண்டும் என அன்று நாடளுமன்றத்தில் குரல் கொடுத்தார். அவரை அப்போதைய மேல்சபையின் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா ஆதரித்தார். நஜ்மா ஹெப்துல்லா அவர்கள் நாடளுமன்றத் தாக்குதல் குறித்த விளக்கங்களில் பல குழப்பங்கள் இருக்கின்றன என்றும் கூறினார். காங்கிரஸ் தலைமை கொறடாவான பிரியரஞ்சன்தாஸ் முன்ஷிஅவர்கள், “நாடளுமன்றத்தைத் தாக்க வந்த காரிலிருந்து 6 பேர் இறங்கிப் போவதை நான் பார்த்தேன், ஆனால் 5 பேர் மட்டுமே கொல்லப்பட்டார்கள். நாடளுமன்ற வளாகத்தின் தொலைக்காட்சிப் பதிவுகள் (CCTV) தெளிவாக 6 பேரைக் காட்டியது.” என்று கூறினார். பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி சொல்வது சரியானதுதான் என்றால் காவல்துறையினர் ஏன் ஐந்து பேர்கள்தான் காரில் வந்தனர் என சாதிக்கின்றனர்? அந்த ஆறாவது நபர் யார்? அவர் இப்போது எங்கே இருக்கின்றார்? அந்தத் தொலைக்காட்சிப் பதிவை ஏன் காவல்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை? அதை ஏன் பொதுமக்களுக்கு காட்டவில்லை? 

4) இது போன்ற கேள்விகளை அப்போது நாடாளுமன்றத்தில் எல்லோரும் எழுப்பினார்கள். ஆனால் உடனேயே நாடாளுமன்றக் கூட்டம் ஒத்திப்போடப்பட்டது. அது ஏன்? 

5) நாடளுமன்றம் தாக்கப்பட்ட உடன் அப்போதைய அரசு நாடளுமன்றத் தாக்குதலில் பாகிஸ்தானின் கை இருக்கின்றது என்பதற்கு மறுக்கவியலாத சாட்சியங்கள் இருப்பதாக அறிவித்தது. அத்தோடு 50 லட்சம் படைவீரர்களை இந்தியா-பாகிஸ்தான் எல்லையை நோக்கிக் கொண்டு சென்றது. இந்தியத் திருநாடு ஓர் அணுஆயுதப் போரை சந்திக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானது. அஃப்சல் என்பவரை சித்தரவதை செய்து வாங்கப்பட்ட ஒப்புதல் வாக்குமூலம் ஒன்றைத் தவிர இவர்களிடம் என்ன அத்தாட்சி இருந்தது? இந்த ஒப்புதல் வாக்குமூலம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. இவர்கள் தங்களிடம் இருப்பதாகச் சொன்ன அந்த மறுக்க முடியாத அத்தாட்சி என்ன? 

6) டிசம்பர் 13 அன்று நாடளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு முன்பே பாகிஸ்தான் எல்லையை நோக்கி படைகளை நகர்த்தியதாக பல செய்திகள் கூறுகின்றன. இது உண்மையா? பொய்யா? 

7) நமது படைகளை போர் பீதியுடன் ஒரு வருடத்திற்கு பாகிஸ்தான் எல்லையில் நிறுத்தி வைத்திருந்தோம். இதற்கு நாம் செய்த வீண் செலவு எவ்வளவு? இதில் நமது இராணுவ வீரர்கள் எத்தனை பேர் மாண்டார்கள்? கன்னி வெடிகளை நாம் சரிவர கையாளாததால், இறந்த குடிமக்கள் எத்தனை பேர்? நமது இராணுவ வாகனங்கள் இடித்துத் தகர்ந்ததால் உயிரிழந்த கிராமவாசிகள் எத்தனை பேர்? கழனிகளில் கன்னி வெடிகளைப் புதைத்ததால் உயிரிழந்த நமது விவசாயிகள் எத்தனை பேர்? 

8) கிரிமினல் வழக்கு ஒன்றில் புலன் விசாரணை மேற்கொள்ளும்போது சம்பவம் நடந்த இடத்தில் கிடைக்கின்ற தகவல்கள் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காரணமாக அமைந்தது எப்படி என்பதை நிருபிக்க வேண்டியது காவல்துறையின் கடமை, அவ்வாறு இருக்க காவல்துறையினர் முஹம்மது அஃப்சல் அவர்களைக் குற்றவாளி என எப்படிக் கண்டுபிடித்தனர்? காவல்துறையின் சிறப்புப்பிரிவு S.A.R.ஜீலானி என்பவர் மூலமாகத்தான் அஃப்சலைக் கண்டுபிடித்த்தாக கூறுகின்றது. ஆனால் அஃப்சலைக் கைது செய்வதற்கான அவரச செய்திகள் ஜீலானி அவர்களைக் கைது செய்வதற்கு முன்பே அனுப்பப்பட்டு விட்டன. அவ்வாறு இருக்க எப்படி காவல்துறையினர் அஃப்சலை நாடளுமன்றத் தாக்குதலில் சம்பந்தப் படுத்துகின்றனர்? 

9) காவல்துறையும், நீதிமன்றங்களும் அஃப்சலை நமது பாதுகாப்பு படையினரிடம் சரணடைந்த ஓர் போராளி என்றும் அவர் ஜம்மு கஷ்மீரின் STF (Special Task Force) சிறப்புக் காவல்படையினர் கண்காணிப்பில் இருந்தவர் என்றும் ஒத்துக் கொள்கின்றன. அப்படி இருக்க தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த ஒருவர் எப்படி நாடளுமன்றத்தையே தாக்குகின்ற பெரும் சதியில் ஈடுபட முடியும். இதற்கு சிறப்புக் காவல்படையினர் தரும் விளக்கம் என்ன? 

10) லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முஹம்மத் போன்ற அமைப்புகள், கஷ்மீரின் சிறப்புக் காவல்படையினர் கீழ் இருந்த ஒருவரை அதிலும் குறிப்பாக சிறப்புக் காவல்படையினரால் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்ட ஒருவரை நம்பி நாடளுமன்றத் தாக்குதல் போன்ற பெரும் பணிகளில் இறங்குவார்களா? 

11) தன்னுடைய வாக்குமூலத்தில் அஃப்சல் என்பவர் தனக்கு முஹம்மது என்பவரை அறிமுகப் படுத்தியவர் தாரீக் தான் என்று கூறியுள்ளார். இந்த தாரீக் என்பவர்தான் முஹம்மது என்பவரை டெல்லிக்கு அழைத்து வரும்படி கூறியதாகவும் கூறுகிறார். தாரீக் என்பவரின் பெயர் காவல்துறையினர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிக்கையிலும் இடம் பெற்றுள்ளது. இந்தத் தாரீக் என்பவர் யார்? அவர் இப்போது எங்கே இருக்கின்றார்? 

12) 2001 டிசம்பர் மாதம் 19ம் நாள், அதாவது நாடளுமன்றத்தாக்குதல் நடந்து ஆறு நாட்களுக்குப் பிறகு, மஹாராஷ்டிராவில் உள்ள ‘தானே’ மாநகரக் காவல்துறை ஆணையர் எஸ்.எம். சங்காரி என்பவர் ஓர் அறிவிப்பைச் செய்தார். அந்த அறிவிப்பில், ”நாடாளுமன்றத் தாக்குதலின் போது சுட்டுக் கொல்லப்பட்ட முஹம்மது யாசீன் ஃபதா முஹம்மத் (என்ற அபூ ஹம்சா) என்பவர் லஷ்கர்-இ-தொய்பாவைச் சார்ந்தவர். அவரை நான் மும்பையில் நவம்பர் 2000ல் கைது செய்தேன். கைது செய்தவுடன் அவரை ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளேன்.” என்று கூறினார். தன்னுடைய வாக்குமூலத்தை உறுதிப் படுத்தும் வகையிலான வலுவான ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். மஹாராஷ்டிரா காவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் சொல்வது உண்மையானால் ஜம்மு கஷ்மீர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்ட முஹம்மது யாசீன் எப்படி நாடளுமன்றத் தாக்குதலில் ஈடுபட்டிருக்க முடியும்? 
காவல்துறை ஆணையர் சங்காரி என்பவர் கூறுவது பொய்யாக இருந்தால் முஹம்மது யாசீன் என்பவர் எங்கே இருக்கிறார்? 
நாடளுமன்றத் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட 5 பேரும் யார் யார் என்பதை இன்னும் கண்டுபிடிக்கவில்லையே ஏன்? 

13) இந்த வினாக்களை எழுப்பும் அருந்ததிராய், “இவற்றை ஆழமாக ஆராய்கின்றபோது நாடளுமன்றத் தாக்குதலில் பாதுகாப்புப் படையினரின் (குறிப்பாக ஜம்மு கஷ்மீரின் சிறப்புக் காவல்படை-யின்) கரங்கள், உதவிகள், ஈடுபாடுகள் ஆகியவை இருப்பது தெளிவாகத் தெரிகின்றது.” அத்தோடு இந்த செய்திகள் நமக்குள் அதிர்ச்சியையோ, ஆச்சரியத்தையோ ஏற்படுத்த வேண்டாம். அரசாங்கங்களும், புலனாய்வுத் துறைகளும் இது போன்றே யுக்திகளைக் கையாண்டு தங்களுடைய இலக்குகளை அடைந்து கொள்வது வரலாற்றில் நிரம்பவே நடந்திருக்கின்றது. 1933ல் ஜெர்மனியில் (Reichstag) ரீசஸ்டாக் என்பதை கொளுத்தித்தான் நாஜிகள் ஆட்சியைப் பிடித்தார்கள். அதேபோல்தான் ஐரோப்பாவின் உளவுத் துறையினர் இத்தாலியில் ரெட் பிரிகேட் என்ற போராளிக் குழுவை மக்கள் மன்றத்தில் தீவிரவாதிகளாகக் காட்டினார்கள். பின்னர் அழித்தார்கள். மேலே உள்ள கேள்விகளை அரசாங்கத்தை நோக்கிவிடுத்துவிட்டு அருந்ததிராய் கூறுகின்றார்: 

”இதற்கு நம் அரசாங்கத்திடமிருந்து கிடைக்கும் பதிலெல்லாம் வெறும் மௌனம் மட்டும் தான்” -M.G.M

No comments:

Post a Comment

please encourage us by sending your comments