Search This Blog

16 September 2012

இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் ஒரு நீங்கா தடம் பதித்தவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்


இலங்கைவாழ் முஸ்லிம்களை பொறுத்தவரையில் செப்டம்பர் 16ஆம் நாள் மறக்க முடியாத தினமாகும். 1980களிற்கு முன்னர் பேரினவாத அரசியல் கட்சிகளை நம்பியிருந்த இலங்கைவாழ் முஸ்லிம்களின் தனித்துவத்தை பேணுவதற்காக உருவாக்ககப்ட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம் அஷ்ரப் அவர்கள் இவ்வுலகினை விட்டு பிரிந்த தினமாகும்.
மிகவும் நீண்ட காலமாக இலங்கையில் புரையோடிப்போயுள்ள இன முரண்பாட்டினை தீர்த்து வைத்து அதனூடாக சமாதான பூமியாக இலங்கையை காண வேண்டும் இதுவே காலத்தின் தேவை என்ற எண்ணத்திலும் செயலிலும் ஈடுபட்டுவந்த ஓர் சமாதான பிரியர் மர்ஹும் அஷ்ரப் இவ்வுலகினை விட்டு பிரிந்து  12 வருடங்களாகின்றன.
விதானையான தகப்பனார் முகம்மது உசைன், தாய் மதீனா உம்மா அவர்களுக்கு மகனாக 1949ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி கிழக்கிழங்கையில் உள்ள சம்மாந்துறையில் மூன்று சகோதரிகளுடன் பிறந்தார் அஷ்ரப். தனது வாழ்விடமாக கல்முனைக்குடியினை கொண்டிருந்து தனது ஆரம்ப கல்வியை கல்முனைக்குடி அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் ஆரம்பித்து இடைநிலை கல்வியை கல்முனை பத்திமா கல்லூரியிலும் உயர்கல்வியை கல்முனை வெஸ்லி கல்லூரியிலும் தொடர்ந்தார்.
தனது பாடசாலை வாழ்வில் இன, மத மற்றும் குல போதமின்றி அனைத்து மாணவ மாணவியர்களுடன் பழகிய இவர் பாடசாலையில் நடைபெறுகின்ற சகலவிதமான நிகழ்வுகளிலும் பங்குபற்றி தனது ஆற்றலை வெளிக்காட்டி வளர்த்தும் கொண்டதுடன் அவரின் பாடசாலை பருவ அனுபவங்கள் அவரின் அரசியல் மூலோட்டத்திற்கு பெரிதும் துணைபுரிந்தது.
தனது எண்ணம்போல் சட்டத்தரணியான அஷ்ரப் பேரியல் இஸ்மாயிலை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். இவ்விருவருக்கும் இடையில் ஓர் ஆண்மகனும் பிறந்தார்.
அஷ்ரபின் வரலாற்றினை எடுத்து பார்க்கும் போது இன்றுள்ள அரசியல்வாதிகளைப் போன்று வெறுமனே ஒரு துறையில் மட்டும் வைத்து அவரை பார்க்க முடியாது ஏனெனில் சிறந்த குடும்ப தலைவனாக, சிறந்த பேச்சாற்றல் வன்மையுள்ள சட்டத்தரணியாக, கவிஞனாக மற்றும் சிறந்த அரசியல்வாதி என பலதுறைகளில் பாண்டித்தியம் பெற்றிருந்தமையினால் அவை ஒவ்வொன்றையும் பார்ப்பதே சாலச் சிறந்தது.
தனது 12ஆம் வயதிலிந்து கவிதைகள், கதைகள் என இலக்கிய துறையில் நுழைந்த அஷ்ரப் தனது வாழ்வில் இரவு வேளைகளில் கவிதைகளை வடிப்பதிலேயே தனது பெரும் பகுதியை செலவிட்டார். அவர் வடித்த முதலாவது கவிதை தாயை பற்றியதாகும்.
என்னைப் பெற்ற தாய்
ஏந்தலான தாய்
பத்து மாதம் சுமந்து
பாங்காய் வளர்க்கும் தாய்
காய்ச்சல் வரும் போதும்
கதறி அழும் தாய்
இக்கவிதை அவர் மரணித்த அதே தினத்தில் தேசிய முரசில் பிரசுரமானது. இவ்வாறு தனது கவிதைகளை காலத்திற்கு காலம் தேவைக்கேற்ப வெளியிட்ட அஷ்ரப், தனது சட்டக் கல்லூரி நண்பனான சிவபாலன் என்பவர் கேஸ்வெடித்து அகால மரணமான போது கல்முனை சவக்காளையில் அவர் பாடிய இரங்கற்பா அனைவரது மனங்களையும் குமுறவைத்தது.
அஷ்ரப் தனது வாழ்வில் எழுதிய கவிதைகள் எல்லாவற்றையும் ஒன்றுசேர்த்து 600 பக்கங்களை கொண்ட “நான் எனும் நீ” கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். இலங்கையில் மாத்திரமன்றி உலகில் வாழும் தமிழ் பேசும் மக்களின் உன்னத வரவேற்பினைப் பெற்ற நூலாக இன்றும் இக்கவிதைத் தொகுப்பு விளங்குகின்றது.
தனது எழுத்தாற்றலால் பல நூல்களை வெளியிட்டார். குறிப்பாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய வெளிச்சங்கள் எனும் பாடல் தொகுப்பு அவரால் இயற்றப்பட்டவையாகும். சிறந்த கவிஞனாக வாழ்ந்து காட்டிய அஷ்ரப் அதனை தனது வாழ்நாளின் இறுதிவரை முன்னெடுத்துச் சென்றார்.
மர்ஹும் அஷ்ரபின் சட்டத்தரணி வரலாற்றை எடுத்து நோக்கும் போது பல பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது சட்டத்துறை கல்வியை நிறைவு செய்தார். இளம் சட்டத்தரணியாக வளர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணியாக வளர்ச்சி பெற்று தனது கணீரென்ற பேச்சாற்றலாலும், வாதத் திறமையாலும் அத்தொழிலில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துக் கொண்டார்.
இவரது அரசியல் பிரவேசத்திற்கான உந்து சக்தியை சட்டக்கல்லூரி வாழ்க்கையே கொடுத்தது அத்துடன் அவர் இளம் வயதில் அரசியல் தொடர்பான கருத்துக்களை வெளியிடவும் சட்டக்கல்லூரி வாழ்க்கையே பெரிதும் உதவியது. இன்றும் கூட அவரால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட சட்டத்துறை சமமந்தமான நூல் காணப்படுகின்றமை அவர் சிறந்த அரசியல்வாதி கவிஞன் என்பதைப் போன்று அவர் சிறந்த சட்ட வல்லுனர் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாகும்.
அஷ்ரபின் இலக்கிய சட்டத்துறை வரலாறு அவரது சிறப்பை தெளிவாக விளக்கினும் அவரது வரலாற்றுப் பயணத்தில் இலங்கைவாழ் தமிழ் பேசும் மக்களுக்காக குறிப்பாக முஸ்லிம் மக்களின் அரசியல் விடிவிற்காக போராடிய தன்மை இன்னும் மறக்க முடியாத வரலாறாகவே உள்ளது. சுரமும் சுரமும் ஒன்று சேர்ந்தால் கின்னரம் பாடும் என்பார்கள் அது போன்று தன்னிடமுள்ள பேச்சாற்றல், வாதத்திறன், இலக்கிய கலை ரசனை மற்றும் சட்டத்துறை வல்லுநர் என்பவற்றை இணைத்து இலங்கைவாழ் முஸ்லிம்களுக்காக அரசியலை மேற்கொண்டதனால் இலங்கையின் அரசியலில் தடம் பதித்தார். இவரது அரசியல் பிரவேசமும், அரசியல் நடாத்துகையும் இலங்கைவாழ் அனைத்து மக்கள் மத்தியிலும் அவரை பிரபல்யப்படுத்தியது.
இலங்கையின் அரசியல் வரலாற்றை ஆராய முற்படும் போது அல்லது முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை ஆராய முற்படும் போது நிச்சயமாக அஷ்ரபின் வரலாறு ஒரு தெளிவான வரலாறாக காணப்படுகின்றது. இலங்கைவாழ் முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றை எடுத்து நோக்கும் போது அவர்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாக எவ்வித தனித்துவமுமின்றி இலங்கை சுதந்திரமடைந்தது முதல் நான்கு தசாப்தங்களாக பேரினவாத அரசுகளின் பின்னால் வாழ்ந்தும் சங்கமித்தும் இருந்தனர். இதனால் முஸ்லிம்களுக்கென எவ்வித தனித்துவமான அரசியல் இயக்கம் இலங்கையில் தடம் பதிக்கவில்லை. இந்நிலையில் 1976ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாகும்.
1976ஆம் ஆண்டு புத்தளம் பள்ளிவாயலுக்குள் நுழைந்த காவல் படையினர் காட்டு மிராண்டித் தனமாக சுட்டதனால்; பல உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வு பற்றி நாடாளுமன்றத்தில் கதிரைகளில் ஒட்டியிருந்த எந்தவொரு முஸ்லிம் அரசியல்வாதியும் வாய்திறந்து பேசாது மௌனம் காத்தனர். இவ்வேளையில் அது பற்றி பேசிய ஒரே ஒருவர் தந்தை செல்வா மட்டுமே. இந்நிகழ்வு மர்ஹும் அஷ்ரபின் அரசியல் உணர்வில் மேலும் ஒரு உந்து சக்தியை கொடுத்தது.
பேரினவாதிகளின் கைகளை பிடித்துக் கொண்டு அரசியல் மேற்கொண்டால் முஸ்லிம்களின் அரசியல், எதிர்காலம் மழுங்கடிக்கப்பட்டுவிடும் என்பதினை தெளிவாக உணர்ந்த அஷ்ரப் தமிழ் பேசும் மக்களுக்காக அதிலும் குறிப்பாக முஸ்லிம் மக்களுக்காக அம்மக்களின் அரசியல் தனித்துவத்தை நிலைநிறுத்துவதற்காக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தினை பல புத்திஜீவிகளுடன் ஒன்றிணைந்து 1981ல் தம்மை ஏக தலைவராக கொண்டு உருவாக்கினார். அன்றிலிருந்து இன்றுவரை பல பிரிவுகளும், பிரிவினைகளும் இக்கட்சிக்குள் வந்திடினும் மக்கள் மத்தியில் இது வேரோடியிருக்கின்றமை இக்கட்சியின் தேர்தல் முடிவுகள் தெளிவாக புடம் போட்டு காட்டுகின்றன.
அஷ்ரப் ஒரு குறுகிய மனித வர்க்கத்தை வைத்துக் கொண்டு தனது அரசியலை மேற்கொண்டார் முஸ்லிம் மக்களின் அரசியல் உணர்வினை கிள்ளி விட்டார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு விருட்சமாக வளர ஆரம்பித்தது. நள்ளிரவை தாண்டியும் மக்கள் மத்தியில் பிரசாரங்களை மேற்கொண்டதுடன் ஈற்றில் வெற்றியும் கண்டதுடன் முஸ்லிம்களின் அரசியல் பயணத்தில் ஒரு தனித்துவ அரசியலையும் அடையாளப்படுத்தினார்.
1981-85வரை அம்பாறை, மட்டகளப்பு மாவட்ட கிராமங்கள் தோறும் முஸ்லிம் மக்களின் அரசியல் தனித்துவத்தை வலியுறுத்தியும் பேரினவாத கட்சிகளையும் அதன் முகவர்களையும் அம்பலப்படுத்தியும் தமிழ் மக்களுக்கெதிரான போக்குகளை விமர்சித்தும் பிரசாரங்கள் மெற்கொண்டார். அஷ்ரபின் அரசியல் வரலாற்றில் கல்முனையில் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் இனமுரண்பாடு அவரை கொழும்பு நோக்கி குடிபெயரச் செய்தது.
காலங்கள் கடந்தன கொழும்பில் இருந்து கொண்டு முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் பல்வேறுவிதமாக சிந்தித்தார். சவூதியில் இருந்து வந்த எம்.ரி.ஹசன்அலி மற்றும் எம்.ஐ.எம். இஸ்மாயில் ஆகியோர் அஷ்ரபை சந்தித்து முஸ்லிம்களின் அரசியல் தொடர்பில் கலந்துரையாடினர். பின்னர் இதில் மருதூர்கனியும் இணைந்து கொண்டார்.
முடிவாக 1986.11.29ஆம் திகதி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இயக்கமாக உருவாக்கப்பட்டு 1988.02.11ஆம் திகதி மரச்சின்னதுடன் தேர்தல் ஆணையாளரால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக பிரகடனப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரையும் இவ்வியக்கம் முஸ்லிம்களின் அரசியல் குரலாக மிளிர்கின்றது.
1988ஆம் ஆண்டு இடம்பெற்ற மாகாணசபை தேர்தலில் பல இயக்கங்களின் கொலை அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் போட்டியிட்டு முழுமையான வெற்றியினை தட்டிக் கொண்டது. அது மட்டுமன்று 1989ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 202,016 வாக்குகளை இலங்கை முழுவதிலும் பெற்ற இக்கட்சி நான்கு ஆசனங்களுடன் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்தது. இலங்கையின் வரலாற்றில் ஒரு முஸ்லிம் கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் நாடாளுமன்றத்தில் முன்வரிசை ஆசனத்தில்; அமர்ந்து கொண்டு தனது மும்மொழி பேச்சாற்றலால் அனைவரினது கவனத்தையும் ஈர்த்தார். 1989ல் நாடாளுமன்றம் நுழைந்த அஷ்ரப் பேச்சாற்றலாலும் கனீரென்ற குரலினாலும் நாடாளுமன்றத்தையே அதிரவைத்தார்.; தமிழ் பேசும் மக்களின் சுய கௌரவத்திற்காக அன்றைய நாடாளுமன்ற ஆசனத்தை அஷ்ரப் பயன்படுத்திக் கொண்டார்.
இவரது அரசியல் சொல், செயல் வடிவம் கொண்டது 1994.03.01இல் கிழக்கில் பிரதேச சபை தேர்தல் இடம்பெற்றது. திகாமடுல்லை மாவட்டத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஏதேனும் ஒரு பிரதேச சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோல்வியை தழுவுமானானல் தான் தனது பதவியை ராஜினாமா செய்வதாக சபதம் கொண்டார். முடிவோ ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சில பிரதேச சபைகளில் தோற்றது. அதனை அடுத்து அஷ்ரப் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
மர்ஹும் அஷ்ரப் அரசியலில் சாணக்கியம் மிக்கவர் 1994.07.01ல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாக்க குமாரத்துங்கவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து அதற்கமைய அன்று நடைபெற்ற 16வது நாடாளுமன்ற தேர்தலில் 09 ஆசனங்களைப் பெற்று இலங்கையின் அரசியல் வரலாற்றில் சிறுபான்மையின கட்சிகளின் ஆதரவின்றி பெரும்பான்மை ஆட்சியாளர்களால் ஆட்சி அமைக்க முடியாது என்பதினை நிரூபித்தார்.
இலங்கையின் அரசியலில் சேவையின் சிகரமாக திகழ்ந்தார்.; இன, மத, பிரதேச வேறுபாடுகளின்றி இலங்கையர் என்ற அடிப்படையில் பொதுஜன ஐக்கிய முன்னணியினால் கிடைக்கப்பெற்ற சிறந்த அமைச்சு பதவியினூடாக சேவைகளை செய்தார். ஏழைகளின் இல்லங்களை நோக்கிச் சென்ற அஷ்ரப் அவர்களின் தேவைகளை பல வழிகளிலும் பூர்தி செய்தார்.
இலங்கைவாழ் முஸ்லிம்களின் கல்வி நிலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் வகையில் 23.10.1995 தனது முழு முயற்சியினால் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை உருவாக்கினார். இது போன்றே ஒலுவில் துறைமுகம் என்பதும் அவரது கனவாக இருந்தது.
தமிழ் முஸ்லிம் மக்களின் உறவு தொடர்பில் மிகவும் உன்னிப்பாக செயற்பட்டவர். அண்ணன் அமிர்தலிங்கம் ஈழம் பெற்றுத் தராவிட்டால் தம்பி அஷ்ரப் பெற்றுத் தருவார் என்று கூறியிருந்தமை அக்காலத்தின் தேவையாக காணப்பட்டது. அதுபோன்றே தமிழ் இயக்கங்களை அனுசரிக்காத எந்தவொரு தீர்வும் தீர்வாகாது எனக் கூறியிருந்தமை அவர் ஒரு சமாதான பிரியர் என்பதை சுட்டுகிறது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு இனவாத கட்சி என பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் கருத்துக்கள் தெரிவித்தனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிற்குள் இருந்தே தேசிய ஐக்கிய முன்னணி எனும் கட்சியை ஆரம்பித்தார் அது மட்டுமன்றி சிங்கள இனத்தவரான அசித்த பெரேரா என்பவருக்கு நாடாளுமன்ற ஆசனத்தை வழங்கி தான் ஒரு இனவாதியல்ல என்பதை நிரூபித்தும் காட்டினார். அஷ்ரபின் மரணத்தை தொடர்ந்து முஸ்லிம் காங்கிரஸிற்குள் ஏற்பட்ட பிளவுகளும், சர்ச்சைகளும் அஷ்ரபின் இலட்சிய பயணத்தை தெடர்வதற்கு தடைக்கற்கற்களாக அமைந்தது.
அஷ்ரப் சிறந்ததொரு மனிதராக அனைத்து விடயங்களிலும் விளங்கி புரட்சியை ஏற்படுத்தியுள்ளர். இலங்கை முஸ்லிம்களின் அரசியலில் வரலாற்றை கற்பதற்கு அஷ்ரபின் வரலாறு காலத்தின் தேவையாகும்.
அஷ்ரபினை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இழந்ததினைத் தொடர்ந்து பிரதேசவாரியாகவும், தனிப்பட்ட விறுப்பு வெறுப்புக்களுடனும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கம் பல சிதறல்களாக சிதறியும், சுகபோக அரசியலின் பின்னாலும் சென்று கொண்டிருப்பதைக் காணலாம். கொட்டும் மழையிலும் வாட்டும் வெயிலிலும் கடற்கரை வீதிகளில் மக்களை ஒன்று சேர்ந்து ஊர் ஊராக சென்றும் தாய்மார்களின் குழவை வாழ்த்துக்களாலும் வளர்த்தெடுக்டகப்பட்ட இக்கட்சி இன்றும் குழந்தை வடிவத்திலேயே தவழ்ந்து செல்வதனை காணலாம்.
இருந்தபோதிலும் மக்கள் மனதில் மாறாத நினைவாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கின்றது இதற்கு அஷ்ரப் போட்ட அடித்தளமே காரணம் என்றால் மிகையாகாது. இன்று அஷ்ரப் உலகை விட்டு பிரிந்து 12வருடங்கள் ஆனாலும் மக்கள் உள்ளங்களில் அஷ்ரப் என்ற ஒரு தலைவனுக்கு என்றுமே சந்ததி சந்ததியாக நீங்கா நினைவலைகள் நிலைத்திருக்கும்.
இலங்கையில் வாழ்கின்ற குறிப்பாக வட கிழக்கில் இருக்கின்ற முஸ்லிம் அரசியல் தலைமைகள் பல பிரிவுகளாக பிரிந்து நின்று அரசியல் செய்வதை விடுத்து அனைவரும் ஒரு அணியில் ஒன்று சேர்நது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற இயக்கத்தை வளர்த்தெடுப்பதே மர்ஹும் அஷ்ரபிற்கு செய்யும் மாபெரும் கைமாறாகும் இல்லையெனில் அன்று அஷரப் சொன்னதைப் பொன்று கிளிக்குஞ்சுகளாக அரசாங்கங்களின் பின்னால் இருக்க வேண்டிவரும் என்பதே யதார்த்தமாகும்.
யா அல்லாஹ் அன்னாருக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவர்க்கத்தை வழங்குவாயாக!

No comments:

Post a Comment

please encourage us by sending your comments