Pages

26 April 2012

அதிகமான வைட்டமின்கள் ஆயுளை குறைக்கும்

மனித ஆரோக்கியத்திற்கு வைட்டமின்கள் அத்தியாவசியமாக தேவைப்படுகின்றன. ஆனால் அதே வைட்டமின்களை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் ஒருவரின் ஆயுளையே குறைக்கக்கூடிய ஆபத்தான நஞ்சாக அவை மாறுகின்றன என்று அமெரிக்க ஆய்வின் முடிவு குறிப்புணர்த்துகிறது.

ஐம்பது வயது முதல் அறுபது வயதுக்கு இடைப்பட்ட சுமார் முப்பத்தி எட்டாயிரம் அமெரிக்க பெண்களின் மருத்துவ சிகிச்சைமுறைகளை ஆராய்ந்த மருத்துவ ஆய்வாளர்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும், ஆனாலும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் கூடுதல் வைட்டமின் மாத்திரைகளை இவர்கள் தினசரி உட்கொண்டதாகவும் கண்டறிந்தனர்.

இப்படி தேவைக்கு அதிகமான கூடுதல் வைட்டமின்களை தொடர்ந்து சாப்பிட்டவர்களின் ஆயுட்காலம் அவர்களை ஒத்த மற்றவர்களின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும்போது குறைந்து காணப்பட்டதை இவர்கள் அவதானித்தார்கள். இதைத்தொடர்ந்து ஆரோக்கியத்துடன் இருப்பவர்கள் தங்களின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்காக கூடுதல் வைட்டமின்களை உட்கொள்வது நன்மை பயக்காது என்பதுடன், ஆபத்தாக முடியும் என்றும் மருத்துவ விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள்.


குறிப்பாக, பல்வேறு வைட்டமின்களடங்கிய மல்டிவைட்டமின் மாத்திரைகள், போலிக் அமிலம், வைட்டமின் பி 6, மெக்னீஷியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகள் ஆகியவை தேவைக்கதிகமாக உட்கொள்ளும்போது ஆயுட்காலத்தை அதிக அளவில் குறைப்பதாக இவர்கள் கருதுகிறார்கள்.

இந்தியாவில் அதிகரித்துவரும் ஒரு ஆபத்தை இந்த ஆய்வின் முடிவுகள் எடுத்துக்காட்டுவதாக கூறுகிறார் சென்னையைச்சேர்ந்த உணவு நிபுணர் மருத்துவர் கவுசல்யாநாதன். அதாவது, மருத்துவரின் முறையான ஆலோசனை பெறாமல், தாங்களாகவே பல்வேறு வைட்டமின்களை மருந்துகடைகளில் வாங்கி சாப்பிடும் போக்கு இந்திய நடுத்தரவர்க்கத்தினர் மத்தியில் அதிகரித்துவருவதாகவும், இது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

please encourage us by sending your comments