ஓர் தீர்வு - மரபணு குப்பையில்(?) ஒர் தீர்வு
நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.
ல ரெயுனிஒன் (La Réunion) - இந்திய பெருங்கடலில், மடகாஸ்கருக்கும் மொரீஷியஸ்சுக்கும் இடையே அமைந்துள்ள இந்த தீவு பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியாகும். சுமார் எட்டு லட்சம் மக்கள் வாழும் இந்த தீவு அறிவியல் உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.
இந்நாட்டின் மக்களை ஒரு வினோதமான மூளை சம்பந்தப்பட்ட நோய் தாக்கிக்கொண்டிருந்தது. இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தீவிர பசியின்மையால் பாதிக்கப்படுவார்கள். சாப்பிட மறுத்தும், கட்டுப்படுத்த முடியாத அளவு வாந்தியும் எடுப்பார்கள். மூளையின் பல்வேறு பகுதிகளை இணைக்கும் white matter காலப்போக்கில் அழிய ஆரம்பிக்கும். சுவாசிப்பதையும், இதயத்துடிப்பையும் கட்டுப்படுத்தும் மூளைத்தண்டுகள் தளர ஆரம்பிக்கும்.
நிச்சயம், இது எண்ணிப்பார்க்கவே கொடுமையான ஒரு நோயே. ரெயுனிஒன் தீவின் பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்நோய்க்கு பறிகொடுத்துவிட்டனர்.
இந்த நோயை Ravine encephalopathy என்றழைகின்றனர். இந்த நோய் மிக அரிதானது. 10000-15000 பேரில் ஒருவருக்கு தான் இந்நோய் வரலாம் என்று ஆய்வாளர்கள் கணக்கிடுகின்றனர். அதே நேரம், ஒருமுறை வந்துவிட்டால், அடுத்த தலைமுறையினருக்கு கடந்துக்செல்லக்கூடியது. ஆக, இது ஒரு பரம்பரை நோயே. இந்த தீவு மக்கள் அதிகளவில் இந்த நோயால் பாதிக்கப்பட காரணமிருந்தது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதால், காலங்காலமாக சொந்தங்களுக்குள்ளாகவே திருமணம் செய்து வந்தனர் இத்தீவின் மக்கள். ஆகையால், இந்த நோய் அடுத்தடுத்த தலைமுறையினரையும் தாக்க ஆரம்பித்துவிட்டது.
சரி, இந்த நோய்க்கான காரணங்கள் என்ன? எப்படி ஏற்படுகின்றது இந்த நோய்?
இதற்கு விடைக்காண ஆரம்பித்து தான் அதிசயத்து போய் நின்றது கர்தோ (Cartault) என்ற ஆய்வாளரின் குழு. இந்த நோய் ஏற்பட எந்த மரபணுக்கள் காரணம் என்று ஆய்வு செய்ய ஆரம்பித்தார்கள் இந்த குழுவினர். சுமார் ஒன்பது குடும்பங்களை ஆய்வுக்குட்படுத்தினர். நோயால் பாதிக்கப்பட்ட பதினைந்து குழந்தைகளும், பாதிக்கப்படாத பதினேழு குழந்தைகளும் இதில் அடங்குவர்.
மரபணுக்களை சோதித்தவர்களுக்கு ஆச்சர்யம் மேல் ஆச்சர்யம் காத்திருந்தது. SLC7A2 என்ற மரபணுவில் தான் பிரச்சனை என்று கண்டுபிடிக்கப்பட்டது. நோயால் பாதிக்கப்பட்டவர்களின் இந்த மரபணுவானது, பாதிக்கப்படாதவர்களின் அதே மரபணுவை காட்டிலும் வித்தியாசமாக இருந்தது.
ஆக, இந்த மரபணுவில் ஏற்பட்ட (இயல்புக்கு மாறான) மாற்றம் தான் நோய்க்கான காரணம் என்று கண்டயறியப்பட்டது. இதில், கவனிக்க வேண்டிய இன்னொரு விசயம் என்னவென்றால், இந்த மரபணுவானது, LINE jumping மற்றும் SINE element எனப்படும் மரபணுக்களோடு தொடர்புடையது. ஆக, இந்த மூன்று மரபணுக்கள் தான் இந்த நோய்க்கு பின்னணியில் இருக்கின்றன என்பது தெளிவானது.
இயல்பான நிலைக்கு மாறாக சில மரபணுக்கள் இருப்பதால் நோய் ஏற்பட்டிருக்கின்றது, இதில் என்ன வியப்பு என்று நீங்கள் கேட்கலாம். அங்கு தான் விசயமே இருக்கின்றது.
குப்பை மரபணுக்கள் (Junk DNA):
அது 1940-களில் ஒரு கட்டம்.
மரபியல் வல்லுனரும், பின்னாளில் நோபல் பரிசு பெற்றவருமான பார்பரா ஒரு வியப்பூட்டும் ஆய்வை நிகழ்த்தினார். உயிரினங்களின் மரபணுக்களில் 'transposons' எனப்படும் மரபணுக்களை கண்டுபிடித்தார் அவர். இந்த மரபணுக்களின் பயன்பாடு தெரியாவிடினும், இவை மற்ற மரபணுக்களை ஒழுங்குப்படுத்தும் செயலை செய்யலாம் என்று எண்ணினார் பார்பரா.
அதே நேரம், இந்த மரபணுக்களை "குப்பை மரபணுக்கள் (Junk DNA)" என்று அழைக்க ஆரம்பித்தனர் ஆய்வாளர்கள். இவை உபயோகமில்லாதவை என்று அவர்கள் கருதியதாலேயே அப்படி அழைக்கலாயினர்.
அது என்ன உபயோகப்படும் மரபணுக்கள், உபயோகமில்லா மரபணுக்கள்?
ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டால், அதில் சில அதிகாரங்கள் (chapter) பயனுள்ளவை என்றும், மற்ற அதிகாரங்கள் பயனற்றவை என்றும் கூறினால் எப்படி இருக்குமோ அப்படியான நிலை தான் இதுவும். உயிரினங்களின் DNA-க்களில் சில பகுதிகள் பயனுள்ள மரபணுக்கள் (coding DNA) என்றும், மிஞ்சியவை பயனில்லாதவை (Non-coding DNA or 'Junk' DNA) என்றும் எண்ணினர் ஆய்வாளர்கள்.
பயனுள்ள மரபணுக்கள் என்பவை, புரதங்களை உருவாக்கும் விதிமுறைகளை (Instructions) தன்னகத்தே கொண்டவை. ஆயிரக்கணக்கான புரதங்கள் ஒருங்கிணைந்து நம் உடலை உருவாக்கவும், பராமரிக்கவும் செய்கின்றன.
பயனற்ற மரபணுக்கள் என்பவை, இத்தகைய செயற்பாடுகளை செய்வதில்லை. அதுமட்டுமில்லாமல், இவை எதற்காக இருக்கின்றன என்பதே நீண்ட காலத்திற்கு புரியாத புதிராகவே இருந்தது/இருந்துக்கொண்டிருக்கின்றது.
பார்பரா முதற்கொண்டு சில ஆய்வாளர்கள், இவை பயனுள்ள மரபணுக்களை ஒழுங்குபடுத்தும் செயலை செய்யலாம் என்பதாக கூறினாலும் இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆகையால் குப்பை மரபணுக்கள் என்ற பெயர் நிலைத்துவிட்டது.
இயல்பாகவே இந்த குப்பை மரபணுக்கள்(?) இறைமறுப்பாளர்களுக்கு நல்ல சந்தர்ப்பத்தை அமைத்து கொடுத்துவிட்டன. 'இறைவன் உயிரினங்களை படைத்தார் என்றால் ஏன் உபயோகமற்ற மரபணுக்கள் இருக்க வேண்டும்?' - இத்தகைய கேள்விகள் எளிதாக எழ ஆரம்பித்தன.
நாத்திகர்களின் அறிவியல் சார்ந்த இறைமறுப்பு புரிதல்கள் நீடித்ததில்லை என்பது வரலாறு நமக்கு சொல்லும் செய்தி. குப்பை மரபணுக்கள் விசயத்திலும் அது தான் நடக்க ஆரம்பித்தது. கடந்த பத்து வருடங்களாக, இவற்றில் நடக்கும் ஆய்வுகள் இந்த மரபணுக்கள் குறித்த மிக வியப்பான செய்திகளை தந்துக்கொண்டிருக்கின்றன.
உதாரணத்திற்கு ஒன்றை சொல்லலாம். ஜப்பான் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில், குப்பை மரபணுக்கள் என்பவை சுமார் 540 மில்லியன் ஆண்டுகளாக உயிரினங்களில் மாற்றமடையாமல் காணப்படுகின்றன என்ற தகவல் வெளிவந்தது.
என்ன? 540 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய விலங்குகளில் குப்பை மரபணுக்கள் இருந்திருக்கின்றனவா? இவை பயனற்றவை, குப்பை என்பதாக இருந்திருந்தால் இத்தனை மில்லியன் ஆண்டுகள் மாற்றமடையாமல் வந்திருக்க வேண்டிய அவசியம் என்ன? - இம்மாதிரியான கேள்விகள் ஆய்வாளர்களை அசரடிக்க, நாம் அறியாத ஏதோ ஒரு முக்கிய பணியை இந்த மரபணுக்கள் நம் செல்களில் செய்கின்றன என்ற முடிவுக்கு வந்தனர்.
ஜப்பான் விஞ்ஞானிகளின் ஆய்வை போலவே வேறு பல ஆய்வுகளும் மேற்கண்ட முடிவுக்கே வந்தன. முக்கிய பணியை செய்கின்றன என்று பலரும் ஒப்புக்கொண்டாலும், அது எந்தமாதிரியான பணி என்பதை தங்கள் ஆய்வுகளுக்கு ஏற்ப வெவ்வேறு கருத்துக்களை கூறினர்.
மொத்தத்தில், குப்பை மரபணுக்கள் குறித்த தவறான புரிதல்கள் விலக ஆரம்பித்தன.
பைனல் பஞ்ச்:
ரெயுனிஒன் தீவின் வினோதமான நோய்க்கு SLC7A2 (Intron), LINE jumping & SINE element போன்ற மரபணுக்கள் தான் காரணம் என்று மேலே பார்த்தோம் அல்லவா?
இவை என்ன தெரியுமா? இதுநாள்வரை குப்பை மரபணுக்கள் என்று கருதப்பட்டவையே இவை. Ooppss.....
இது அறிவியல் உலகை பிரம்மிக்க வைக்கும் ஒரு செய்தியே. காரணம், இந்த மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் உயிர்க்கொல்லி நோய்க்கு வழிவகுக்கின்றது என்றால் இவற்றை எப்படி குப்பையாக கருத முடியும்?
ஆக, குப்பை மரபணுக்கள் குறித்த ஆய்வாளர்களின் முந்தைய புரிதல்கள் தவறு என்பது மற்றொரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
'ஓகே. குப்பை மரபணுக்களில் சில பயனுள்ளவையாக இருக்கலாம். ஆனால் இன்னும் பல மரபணுக்கள் பயனற்றவையாக இருக்கின்றவே' என்று சிலர் கூறலாம். நேற்றுவரை இவை ஒன்றுக்கும் உபயோகமில்லாத மரபணு தொகுப்பு, இன்றோ இவற்றில் சில மிகவும் பயனுள்ளவை, அப்போ நாளை?
எப்போது குப்பை மரபணுக்கள் என்று கருதப்படுபவைகளில் சில, மிகவும் பயனுள்ளவை என்று கண்டறியப்பட்டு விட்டதோ, அப்போதே மற்ற (குப்பை) மரபணுக்கள் குறித்த எண்ணங்களையும் மறுபரிசீலனை செய்யும் வழிமுறைகளை அவை திறந்து விட்டு விட்டன என்பதே நிதர்சனமான உண்மை.
ஒரு குறிப்பிட்ட நம்பிக்கையை நோக்கி அறிவியல் பயணிக்காது. அப்படி பயணித்தால் அது அறிவியலாக இருக்கவும் முடியாது.
இறைவன் நம்மை நேர்வழியில் நிலைநிறுத்துவானாக...ஆமீன்.
இறைவனே எல்லாம் அறிந்தவன்.