Pages

16 January 2014

இஹ்வான்கள் ஆட்சியில் தோற்கவில்லை

-பேரறிஞர் யூசுஃப் அல் கர்ளாவி -

கடந்த 22 ஆம் திகதி கட்டார் ”வதன்” தேசிய பத்திரிகைக்கு அல்லாமா யூசுஃப் அல் கர்ளாவி அவர்கள் வழங்கிய நேர்காணலின் இறுதிப்பகுதியின் சுருக்கம் இது. அதனை மீள்பார்வை வாசகர்களுக்காக மொழிமாற்றம் செய்து தருகிறோம். நேர்கண்டவர் ஊடகவியலாளர் அஹ்மத் அலி.

* தற்போதைய எகிப்து அரசாங்கத்தை நீங்கள் எதிர்ப்பதற்கான காரணமென்ன?

சுமார் 60 வருடம் எகிப்து மக்கள் அடக்குமுறை ஆட்சியை அனுபவித்திருக்கின்றனர். ஜனவரி 25 புரட்சி எப்படியான புரட்சி என்பதை உலகம் அறிந்தே வைத்திருக்கின்றது. 

இராணுவம் இழந்து போன நாட்டை மீண்டும் தமது கைவசம் கொண்டுவர விரும்பியது. பிறகு பாராளுமன்றத்தை கலைத்தது. மக்கள் முதற்தடவையாக தேர்ந்தெடுத்த தலைவரை நீக்கியது. அரசியலமைப்பை செல்லுபடியற்றதாக்கியது. சூறா சபையைக் கலைத்தது. பாரம்பரிய சட்டக்கோவையை அறிவித்தது. மக்கள் நடமாட்டத்திற்கு தடைபோட்டது. ஆயிரக்கணக்கானவர்களை பாதையோரத்தில் போட்டு சுட்டுக் கொன்றது. 

எகிப்தின் மரியாதைக்குரிய மனிதர்களை சிறைப் பிடித்தது. கடந்த 60 வருடங்களில் நடக்காத அநியாயங்களை ஒருசில வாரங்களுக்குள் புரட்சியாளர்கள் அரங்கேற்றினர். 

சுதந்திரமான எல்லா முஸ்லிம் அறிஞர்களின் நிலைப்பாடுதான் எனது நிலைப்பாடும். அசத்தியத்திற்கு எதிராக சத்தியத்துடன் இருப்பது அது. அநியாயக்காரனுக்கு எதிராக அநீதிக்குள்ளாக்கப்பட்டவர்களுடன் இருப்பது. அடக்குமுறைக்கு எதிராக சுதந்திரத்துடன் இருப்பது.

* பதவி நீக்கப்பட்ட ஜனாதிபதி முர்ஸி தொடர்பாக உங்களது புதல்வர் அப்துர் ரஹ்மான் உங்களது கருத்துடன் முரண்படுகிறார். இது குறித்து பத்திரிகையொன்றுக்கு திறந்த மடலொன்றையும் அனுப்பியிருந்தார். இது குறித்து?

பிள்ளைகளை சுதந்திரமாக வளர்த்தெடுக்குமாறு இஸ்லாம் எமக்குப் போதித்துள்ளது. அவர்களை எமது கார்பன் பிரதிகளாக்க நாம் முயற்சிக்கக் கூடாது. அப்துர் ரஹ்மான் ஒரு கவிஞர். ஒரு எழுத்தாளர். அரசியல் வாழ்வில் அவருக்கு பங்கு இருங்கிருக்கிறது. அவர் தந்தையை மதிக்கிறார். அவருடன் முரண்படவும் கூடும். 

ஜூன் 30 இராணுவப் புரட்சி தொடர்பில் நான் பத்வா வெளியிட்டேன். அதற்கு அவர் ”மன்னித்துக் கொள்ளுங்கள் என் அன்புத் தந்தையே! என்ற தலைப்பில் பதிலெழுதினார். அவர் கொண்டிருந்த கருத்துகள் தவறு என்று விளங்கப்படுத்தினார். இராணுவப் புரட்சியை மிக வன்மையாக எதிரப்பவர்களில் இப்போதும் அவரும் ஒருவராகிவிட்டார். தற்போது சரியான பாதைக்கு திரும்பிவிட்டார். 

* எகிப்தின் பொதுநலனைக் கருத்திற்கொண்டு பல விட்டுக் கொடுப்புக்களைச் செய்யுமாறு நீங்கள் ஏன் இஹ்வான்களுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது?

சட்டரீதியாக விடுக்கப்படும் எகிப்தின் பொதுநலனை மையப்படுத்திய, இரத்தம் சிந்தவும் நாட்டை நாசமாக்கவும் மக்களை இழிவுபடுத்தவும் காரணமாயிருந்தவர்களை விசாரிக்கின்ற எந்தவொரு அழைப்பும் வரவேற்கத்தக்கது. ”நாட்டில் அத்துமீறியவர்கள் அதிகமாகவே சீரழிவுகளை உண்டுபன்னினார்கள்” என்று குர்ஆன் குறிப்பிடுகிறது. 

தேர்தல்களில் வெற்றிபெற்றது முதல் இஸ்லாமியத்தரப்பு நிறைய விட்டுக்கொடுப்புக்களை செய்துள்ளது. பாராளுமன்றத்தை கலைத்தார்கள். முதல் அரசியலமைப்பு சபையை செல்லுபடியற்றதாக்கினார்கள். இரண்டாவது அரசியலமைப்புச் சபையையும் அவர்கள் கலைக்க விரும்பினார்கள். 

மூன்றில் இரண்டு பெரும்பான்மை எடுத்திருந்தும் கூட அரசியலமைப்பை பொதுஜன வாக்கெடுப்புக்கு விட்டு ஆம் என்று வாக்களிக்கக் கோரினார்கள் இஸ்லாமிய வாதிகள். 

தேல்தல்கள் இன்றி நாட்டை ஆள்வதற்கு தமக்கு உரிமை உள்ளது என்று ஏன் மூன்றாம் தரப்பு நினைக்கிறது. எகிப்தியர்களின் மண்டையோடுகளின் மேல் ஆட்சியமைத்திருக்கும் இவர்கள் ஏன் விட்டுக் கொடுப்புக்களை செய்யக் கூடாது. தேர்தல்கள் ஊடாக ஆறுதடவைகள் தமது விருப்பத்தை தெரிவித்த மக்களின் விருப்பை ஏன் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. 

* நீங்கள் இஹ்வான்களை கடுமையாக ஆதரிக்கிறீர்களே?

நான் சுதந்திரமான உணர்வு கொண்டவன். ஆயினும் இஹ்வான்களின் பாசறையில் வளர்ந்ததை மறுக்க மாட்டேன். சுமார் 70 வருடங்கள் அவர்களிடம் வளர்ந்திருக்கிறேன். இப்போது அவர்களிலிருந்து தனித்திருக்கிறேன். நிலைப்பாடுகள் கருத்துக்களில் யாரும் என்னை நிர்ப்பந்திப்பதில்லை. அதிகமான நிலைப்பாடுகளில் நான் அவர்களுடன் முரண்பட்டுள்ளேன். உங்களுக்கு ஒரு இரகசியத்தை சொல்கிறேன். ஜனாதிபதி தேர்தலில் முதற் கட்டத்தில் நான் அப்துல் முன்இம் அபுல் புத்தூஹை ஆதரித்தேன். இஹ்வான்களது நிலைப்பாடு அவருக்கு எதிரானதாக இருந்தது.

* புரட்சியின் இலக்குகளை நிறைவேற்றுவதில் முர்ஸியின் கொள்கை தோல்வியடைந்து விட்டது என அவரது பெரும்பாலான ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இவ்வளவு ஆவேசத்துடன் ஜனாதிபதி முர்சியை நீங்கள் ஆதரிக்கிறீரகள்? 

முர்ஸி ஜனநாயத்தின் முகவரி. ஸீஸி அடக்குமுறையின் முகவரி. முர்ஸி தோற்கவில்லை. அவர் தோல்வியடையச் செய்யப்பட்டார். காலம் எடுத்து தயார்பண்ணப்பட்டது புரட்சி. அதில் சர்வதேச, பிராந்திய சக்திகளும் புரட்சிக்கு எதிரானவர்களும் பங்குபற்றினர். எகிப்து மக்கள் யதார்த்தத்தை விளங்கியுள்ளனர். 

பொருளாதார ஏற்றுமதி குறிகாட்டிகள் முர்ஸியின் காலப்பகுதியில் உயர்ந்திருந்தன. இராணுவப் புரட்சியினால் இப்போது நாடு பின்தள்ளப்பட்டுள்ளது. புரட்சியை அழிக்க முனையும் புரட்சியின் எதிர் சக்திகளிடமிருந்தும் இராணுவத்தின் கரத்திலிருந்தும் புரட்சியைப் பாதுகாக்க புரட்சியாளர்கள் விரும்புகின்றனர். 

அறபிகள், முஸ்லிம்கள், உலகத்தின் சுதந்திரவான்கள் அனைவரும் எகிப்து மக்களுடன் நிற்பது கடமையாகும். எப்படி சிரிய, ஈராக், விளிம்புநிலை சமூகங்களை கொடிய அடக்குமுறையின் பாதிப்பிலிருந்து எழுந்து நிற்க அவர்கள் உதவியது போன்று எகிப்து மக்களுடன் நிற்க வேண்டும். 

”பூமியில் நலிவுற்றுப் போயிருப்பவர்களுக்கு எமது அருள்களைச் சொரிய நாம் விரும்புகிறோம். அவர்களை அவர்களின் தலைவர்களாக நாம் ஆக்குவோம். அவர்களை வாரிசுக்காரர்களாகவும் ஆக்குவோம். பூமியில் அவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவோம். ”

* நாட்டை அரசியல் ஸ்திரத்தன்மைக்குள் இட்டுச்சென்ற இஹ்வான்களின் ஒரு வருட ஆட்சிகுறித்த உங்களது மதிப்பீடு என்ன?

ஏனைய கட்சிகளை ஆட்சியில் பங்கேற்கச் செய்ய இஹ்வான்கள் எவ்வளவோ முயன்றார்கள். ஆனால் அவர்கள் அதை மறுத்து விட்டனர். அடைவுகளைப் பொறுத்தவரை இஹ்வான்கள் பலவற்றைச் சாதித்தனர். நீண்டகால அடிப்படையிலான பெரும் திட்டங்களை ஏற்படுத்தினர். பல்வேறு நாடுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்தினர். அவர்கள் தோற்க வில்லை. தோற்கடிக்கப்பட்டார்கள். 

விடயங்களை மதிப்பிடுவதில் அவர்கள் மட்டும் தவறிழைக்கவில்லை. எல்லாக் கட்சிகளுமே தவறிழைத்தன. இது எதிர்பார்க்கப்பட்டதுதான். இஹ்வான்களுக்கு எதிராக ஒரு ஊழல் குற்றச் சாட்டு கூட இல்லை. 
அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. முர்ஸி ஆட்சியைப் பொறுப்பெடுத்து சிலவாரங்களுக்குள்ளே அவருக்கெதிரான யுத்தம் ஆரம்பிக்கப்பட்டவிட்டது. அவருக்கு எதிராக பெரும் சதித்திட்டங்களை அவர்கள் தீட்டினர். ”அவர்கள் செய்வதையிட்டு உமது இரட்சகன் பராமுகமாக இல்லை.”

* இஹ்வான் இயக்கத்தில் பிளவுகள் குறித்த உண்மைநிலை என்ன?

இஹ்வான் இயக்கத்தில் பிளவுகள் ஏதும் ஏற்படவில்லை. மாற்றமான இந்நெருக்கடி அவர்களது பிணைப்பை வலுப்படுத்தியிருக்கிறது. முன்பு பிரிந்து சென்ற சில நபர்கள் இருக்கின்றனர். ஊடகங்கள் அவர்களுக்கு பெரும் வரவேற்புக் கொடுத்திருக்கின்றன. கண்ணியமானவன் இதுபோன்றவற்றால் வருத்தப்படமாட்டான். 

* இஹ்வான் இயக்கம் தடைசெய்யப்பட்டு அதன் நடவடிக்கைகளுக்கும் முற்றாக தடையேற்படுத்தப்பட்டு அதன் பெரும்பாலான தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டுள்ள நிலையில் இஹ்வானுல் முஸ்லிமூன் ஜமாஅத்தின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

இஹ்வான்களின் மக்களாதரவு குறித்து வெளிவந்துள்ள சுயாதீன கருத்துக் கணிப்பீடுகளை வாசித்துப் பாருங்கள். அப்துந்நாஸர், முபாரக் அடக்கியாண்ட இஹ்வான்களின் எதிர்காலத்தை வாசித்துப் பாருங்கள். இஹ்வான்களின் எதிர்காலத்தைப் புரிந்து கொள்வீர்கள். இஹ்வான்கள் உலகில் 70 இற்கு அதிகமான நாடுகளில் தற்போது இயங்குகிறார்கள். ஒளிவுமறைவில் இயங்கிவந்த அவர்கள் மிக வெளிப்படையாக இயங்குகிறார்கள்.

நன்றி - மீள்பார்வை மீடியா சென்டர்  (Meelparvai Media Centre)

No comments:

Post a Comment

please encourage us by sending your comments